கடன், கல்யாணத்தடை நீக்கும் நரசிங்கபுரம் நரசிம்மர்

கடன், கல்யாணத்தடை நீக்கும் நரசிங்கபுரம் நரசிம்மர்

ஸ்வாதி நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்மரை, தொடர்ந்து 9 ஸ்வாதி நட்சத்திர தினத்தில் சேவித்து வர தீராத கடன், நோய் நொடி, கல்யாணத்தடை போன்றவை நிவர்த்தி ஆகும் என்பது சிறப்பு.

சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது .

கோவிலுக்கு செல்லும் வழி :
சென்னையில் இருந்து பூந்தமல்லி வழியாக பெங்களூர் ஹைவேயில், தண்டலத்தில் இருந்து வலது புறம் திரும்பி பேரம்பாக்கம் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும்.

கூவம் பஸ் ஸ்டாப்பில் இருந்து 2 ரிவி வயல்களின் நடுவே இயற்கையை ரசித்தவாறே நடந்து செல்லலாம். இந்த சாலை, காரில் செல்ல சற்று சுமார்தான். கூவம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு. பூந்தமல்லியில் இருந்து கோவில் வரை நேரடி பஸ் வசதியும் உண்டு. (தடம் எண் 591 ). முதல் பஸ் காலை 6 .15 மணிக்கு.
Narasimhar god image
இந்த க்ஷத்ரம் 16-வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் ஏழரை அடி உயரத்தில் மகாலக்ஷ்மியை இடது துடை மீதமர்த்தி சாந்த ஸ்வரூபியாக அருள் பாலிக்கிறார். பெருமாளுக்கு கல்யாண லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற பெயரும் உண்டு. தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களைப் பார்த்தவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. சமீபத்தில் ஸ்ரீ அஹோபில மடம் 45ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் விஜயம் செய்து மங்களாஸாசனம் செய்துள்ளார் என்று கோவில் குறிப்பேடு சொல்கிறது.

“நாளை என்பது நரசிம்ஹனிடத்தில் இல்லை” என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்ற செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். பெரிய திருவடி (கருடாழ்வார்) சுமார் 4 அடி உயரத்தில் 16 நாகங்களை அணிந்து இருப்பதால் நாக தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

அந்திப் பொழுதில் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அவதரித்த நரசிம்ஹரை, தொடர்ந்து 9 ஸ்வாதி நக்ஷத்திர தினத்தில் சேவித்து வர தீராத கடன், நோய் நொடி, கல்யாணத்தடை போன்றவை நிவர்த்தி ஆகும் என்பது சிறப்பு.

மரகதவல்லித் தாயார் ஸந்நிதி பிரகாரத்தில் தனியே உள்ளது. முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.
சக்கரத்தாழ்வார், ஆண்டாள் மற்றும் ராமருக்கும் தனித் தனியே ஸந்நிதிகள் அமைக்கப் பட்டுள்ளது. ஆஞ்சநேயர் ஸந்நிதி கோவிலுக்கு வெளியே பெருமாளைப் பார்த்தவாறு அமைந்துள்ளது.

சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கோவில் வாசலில் அர்ச்சனைத் தட்டு, புஷ்பம் போன்றவை கிடைக்கும். பிற நாட்களில் செல்வோர், புஷ்பம் போன்றவற்றை பிற ஊர்களிலிருந்து வாங்கிச் செல்வது உசிதம். கோவிலை ஒட்டி “கோசாலை”-யும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அகத்தி கீரை கிடைக்கும் பட்சத்தில் பசுக்களுக்குக் கொடுக்கலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30-12.00 மணி, மாலை 4.30-8.00 மணி வரை. (விசேஷ காலங்களில் மாறக் கூடும்).

Post a Comment

0 Comments